சிட்னி - Sydney

சிட்னி
ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது? என்று கேட்டால் பலர் உடனே 'சிட்னி' என்று தான் சொல்வார்கள்.

ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது? என்று கேட்டால் பலர் உடனே 'சிட்னி' என்று தான் சொல்வார்கள். ஆஸ்திரேலியா ஒரு நாடாக உருவாகிய வருடத்தில் (1788-ல்) உருவாக்கப்பட்ட சிட்னி, அதன் தலைநகர் இல்லை என்பது வியப்பிற்குரியது தான். கான்பெர்ரா தான் தலைநகர் என்றாலும் பலருக்கும் சிட்னி தான் உண்மையான தலைநகரம்.

2000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ், நகரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நகரின் போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு எல்லாமே கிட்டதட்ட புதிதாய் அமைக்கப்பட்டது. ஏராளமான புதிய ஹோட்டல்கள், அபார்ட்மெண்ட்கள் நகரின் அழகையும் இயல்பையும் கெடுத்து விட்டது என்பது உள்ளூர்வாசிகளின் புகார். ஆம், 4 கோடி மக்கள் வாழும், பிரபலமான வர்த்தக நகராக இருந்தாலும், கவர்ச்சிகரமான, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு சிறு நகர இயல்பு இங்கு உண்டு.

போர்ட் ஜாக்ஸன் எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். இதன் குறுக்கே உள்ள சிட்னி துறைமுக பாலம் பிரசித்தமானது. இந்தப் பாலமும் அருகில் இருக்கும் ஓபரா ஹவுஸும் உலகம் முழுவதும் அறிந்துள்ள சிட்னியின் அடையாளங்கள். இந்த இயற்கை துறைமுகம் உண்மையில் ஒரு கடலில் மூழ்கிய பள்ளத்தாக்கு. ஆகவே சுற்றிலும் பல வளைவுகள், நெளிவுகள் துறைமுக கடற்கரையை சுவாரசியமாக ஆக்குகிறது. இது போதாதென்று பாரமட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது. கோடை காலத்தில் (டிசம்பர் - ஜனவரி) சிட்னியின் கடற்கரை நிரம்பி வழியும்.

நகரின் மையத்தில் உள்ள 'மத்திய வர்த்தக மாவட்டம்' (CBD) வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரின் வர்த்தக நாடி. நகரின் சம்பிரதாய பூங்காவான ஹைட் பார்க்கின் நடுவில் செல்லும் பார்க் தெருவின் வழியாக மற்றொரு முனையில் டவுன் ஹால் மற்றும் ஷாப்பிங் மையங்களை அடையலாம். ஹைட் பார்க்கைச் சுற்றிலும் ஆஸ்திரேலிய மியூசியம், போர் நினைவுச் சின்னங்கள் ஆகியவை உள்ளது.

ஓபரா ஹவுஸ் அருகிலேயே பழமையான 'தி ராக்ஸ்' என்னுமிடத்தில் ஆதிவாசிகள் பாறைகள், குகைகளில் செதுக்கிய சிற்பங்களை இன்றும் கானலாம். ஆஸ்திரேலியாவிலேயே பழங்குடியினர் அதிகம் வாழும் நகரம் சிட்னி தான்.

நகரிலிருந்து சிறிது நேர படகு சவாரியில் நகரின் வெளியே உள்ள, இன்னும் கூட அதிகம் பாதிப்படையாத புதர்பகுதிகளை அடையலாம். ஆஸ்திரேலிய விலங்குகளும், பறவைகளும் கொஞ்சி விளையாடும் இடம்.