செல்போனைப் பற்றி... - Cell Phones

செல்போனைப் பற்றி...
செல்போனின் தொழில்நுட்பம் புதுமையானது என்றெல்லாம் நினைத்தால் ஏமாற்றமாக இருக்கும். செல்போன் உண்மையில் ஒரு ரேடியோ.

செல்போனைப் பற்றி...:
செல்போனின் தொழில்நுட்பம் புதுமையானது என்றெல்லாம் நினைத்தால் ஏமாற்றமாக இருக்கும். செல்போன் உண்மையில் ஒரு ரேடியோ. நவீனமான இரு வழி ரேடியோ, ஆனால் அது ரேடியோ தான்.

அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் டெலிபோனை உருவாக் கியது 1876ம் வருடம். இத்தாலியரான மார்க்கோனி ரேடியோவை உருவாக்கியது 1894ம் வருடம். இந்த இரண்டும் ஒன்று சேர்வது இயல்பானது. செல்போனில் புதுமை என்றால் அது பேட்டரி தொழில்நுட்பம் தான்.

ரேடியோ டெலிபோன்:
செல்போன்கள் வருவதற்கு மிகவும் முன்பாகவே அமெரிக்காவில் ரேடியோ டெலிபோன் என்பது நடைமுறையிலிருந்தது. இது பெரியதாக இருப்பதால் கார்களில் மட்டும் அமைத்தார்கள். நகரின் மத்தியில் ஒரு கோபுரத்திலிருந்து போன் கால்கள் அந்தந்த ரேடியோ டெலிபோன் எண்களுக்கு ஒலிபரப்பப்படும். ரேடியோ டெலிபோன்களும் 40 - 50 மைல் தூரம் ஒலிபரப்பக்கூடிய ட்ரான்ஸ்மிட்டர்களைக் கொண்டிருக்கும். இதனால் இரு வழி டெலிபோன் சாத்தியமானது. ஆனால் ஒரே சமயத்தில் ஒரு நகரத்தில் சுமார் 25 கால்கள் வரை பேசும் வசதி தான் இருந்தது. இதனால் மிக அத்தியாவசியமான நபர்கள் மட்டும் இதை உபயோகப்படுத்தும் நிலை தான் இருந்தது.

பின்னர் இதையே ஒரு நகர் முழுவதும் பல குறைந்த சக்தி கொண்ட ட்ரான்ஸ்மிட்டர் கோபுரங்கள் அமைத்து இதற்கு ஒதுக்கப்பட்ட அலைவரிசைகளையே நகரில் பல இடங்களில் வெவ்வேறு எண்களுக்கு உபயோகப்படுத்தும் உத்தியைக் கையாண்டு செல்போன் நடைமுறைக்கு வந்தது. செல்போனில் உள்ள ட்ரான்ஸ்மிட்டரும் குறைந்த சக்தி கொண்டதாக இருந்தால் போதுமென்பதால் அதன் அளவு மற்றும் எடை குறைந்து கையில் தூக்கக்கூடியதாக ஆனது.

டிஜிட்டல் நுட்பம்:
Cell Phone அமெரிக்காவில் இது முதலில் நடைமுறைக்கு வரும் போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை. அதனால் அங்கு இன்னும் சில மாகாணங்களில் பழைய அனலாக் தொழில்நுட்பத்தில் தான் செல்போன்கள் வேலை செய்கின்றன.

இதற்கு மாறாக ஐரோப்பா, ஆசியாவில் GSM எனும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உபயோகத்திலிருப்பதால், இங்கு செல்போன்களுக்கான அலைவரிசையை மிக நுணுக்கமாக பிரித்தும், ஒலியை டிஜிட்டலாக (அதாவது 0 மற்றும் 1 என) மாற்றி கம்ப்ரஸ் செய்து மிக விரைவாக அனுப்பியும் அதிக அளவு செல்போன்களை உபயோகப்படுத்த முடிகிறது.

கேன்சர் வருமா?
செல்போன் தொடர்ந்து உபயோகித்தால் கேன்சர் வருமா? என்பது உலகளாவிய சர்ச்சையாக இருக்கிறது. இதை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால் செல்போனில் உள்ள ஆண்டெனா ரேடியேஷனை உருவாக்குகிறது என்பது நிச்சயமான ஒன்று. இது மிகவும் குறைந்த சக்தியுடையது தான், ஆனால் உபயோகிக்கும் போது தலைக்கு மிக அருகில் இந்த ரேடியேஷன் இருப்பது தான் கவலைக்குரியதாக இருக்கிறது. மேலும் எல்லா நாடுகளிலும் பள்ளி சிறுவர்களும் அதிக அளவில் செல்போன் வைத்திருக்கிறார்கள், அவர்களுடைய எதிர்காலத்தில் சிறு வயதிலிருந்தே தொடர்ந்த ரேடியேஷன் எப்படி பாதிக்குமோ என பெற்றோர்கள் தற்போது அஞ்சுகிறார்கள்.