பீர் நோயைத் தடுக்கும்! - Beer - A health drink

பீர் நோயைத் தடுக்கும்!
பீர் மற்றும் மது பானங்கள் பற்றிய இரு பல்கலைக்கழக ஆய்வு விபரங்கள்.

பீர் ஒரு ஆரோக்கிய பானம் என்று ஒரு கருத்து உண்டு. தற்போது இதய நோய், ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை தவிர்க்க உதவும் என்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஸ்க்ராண்ட்ன் பல்கலைக்கழகத்தின் டாக்டர்.ஜோ. வின்ஸன் அறிவித்துள்ளார்.

உடலுக்கு ஊறு விளைவிக்கும் இரு வகையான கொழுப்புகளின் ஆக்ஸிடேஷன் செயல்பாட்டை பீர் தடுத்து நிறுத்துகிறது என்று சோதனைச்சாலை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆக்ஸிடேஷன் இதயம் மற்றும் ரத்தக்குழாய் நோய்களின் ஆரம்ப கட்டமாக கருதப்படுகிறது.

பீர் வகைகளிலேயே கருமையான 'லேகர்' வகை பீர் ஆக்ஸிடேஷனை அதிகமாக தடுத்து நிறுத்துவதாக அறிந்துள்ளனர். அதே வேளையில் பீருக்கு பதில் மது பானம் அருந்தினால் அது ஆக்ஸிடேஷனைத் தடுத்து நிறுத்துவதில்லை என்றும் அதனால் பீரில் உள்ள ஆல்கஹாலினால் இந்த நன்மை ஏற்படவில்லை என்றும் இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதைப் போன்று கனடாவின் மேற்கு ஓண்டாரியோ பல்கலைக்கழகத்தின் டாக்டர்.ஜான் ட்ரீவிதிக் 'தினமும் ஒரு டோஸ் மது பானம் அருந்துபவர்களுக்கு கண்ணில் காட்ராக்ட் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது' என்று ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்த இரு ஆய்வுகளுமே பீர் மற்றும் மதுபானக் கம்பெனிகளின் பொருளாதார உதவியாடில் மேற்கொள்ளப்பட்டன.