வீடு கட்ட கடன் - Housing Loans

வீடு கட்ட கடன்
வீடு வாங்குவதற்கு, வீட்டை விரிவுபடுத்துவதற்கு, வீட்டை மேம்படுத்த என பலவிதமான கடன் வசதிகள். பல விதமான வட்டி விகிதங்கள்.

வீடு வாங்குவதற்கு, வீட்டை விரிவுபடுத்துவதற்கு, வீட்டை மேம்படுத்த என பலவிதமான கடன் வசதிகள், பல விதமான வட்டி விகிதங்கள். உங்களால் போதுமான அளவு சம்பாதிக்க முடியும் என நிரூபித்தால் போதும். பணம் கொடுக்க பல நிறுவனங்கள், வங்கிகள் தயார்.

நிறுவனங்கள் யார் யார்?
HDFC எனும் அரசு நிறுவனம் வீட்டு கடன் கொடுப்பதில் மிகப் பெரிய நிறுவனம். மொத்த வீட்டுக் கடன்களில் 60% வரை இந்நிறுவனமே வழங்குகிறது. மற்ற முக்கிய நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கி, ICICI, சிட்டிபாங்க், ஹட்கோ, எல்.ஐ.சி., ஜி.ஐ.சி. (GIC) ஆகியவை.

நிலையான வட்டி விகிதக் கடன்கள்:
இந்த வகைக் கடன்களின் வட்டி விகிதம் தவணைகளைத் திருப்பிச் செலுத்தி முடியும் வரை மாறாமல் நிலையாக இருக்கும். தற்போதைய வட்டிவிகிதம் 13%. மாதத் தவணைகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் உள்ள நன்மை நடப்பு வட்டி விகிதம் திடீரென உயர்ந்தால் கடன் வாங்கியவருக்கு பாதிப்பு இருக்காது. ஆனால் அதே போல நடப்பு வட்டி விகிதம் குறைந்தாலும் அவருடைய கடனுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட மாட்டாது.

மாறுபடக்கூடிய விகிதாச்சார கடன்கள்:
முதல் வகை கடன் உங்களுக்கு நன்மை தராது என்று நினைத்தால் இந்த முறையைத் தேர்வு செய்யலாம். HDFC முதலில் அறிமுகப்படுத்திய முறை இது. உங்களது கடனுக்கு எப்போதுமே HDFCயின் முதன்மை நடப்பு வட்டி விகிதத்தில் தான் வட்டி கணக்கில் கொள்ளப்படும். விகிதம் பெருமளவு குறைந்தால் உங்களுக்கு நன்மை. ஆனால் வட்டி விகிதம் உயர்ந்தால் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதிலும் மாதாந்திரத் தவணை ஒரே அளவானவை தான். வட்டி விகிதத்தின் வேறுபாட்டைப் பொறுத்து நீங்கள் திருப்பிச் செலுத்தும் காலம் வேறுபடும். அதிகபட்சம் 15 வருடங்களுக்கு இந்தக் கடனை நீட்டிக்க இயலும். வீட்டின் மதிப்பில் 85% வரை கடனாகப் பெறவும் இயலும்.

படிப்படியாக உயரும் மாதாந்திர தவணைத் திட்டம் (SURF):
இந்த திட்டமும் HDFC அறிமுகப் படுத்தியது தான். இந்த திட்டத்தின் கீழ் உங்களுடைய மாதாந்திரத் தவணைத் தொகை குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்ந்து கொண்டே போகும். அதாவது உங்களின் திருப்பிச் செலுத்தும் திறன் உயர்ந்து கொண்டே போகும் என்று நீங்கள் உறுதியாக நம்பினால் இத்திட்டத்தின் மூலம் விரைவாகத் திருப்பிச் செலுத்தி கடனிலிருந்து விடுபடலாம்.

குறுகிய கால பிரிட்ஜிங் கடன்:
உங்களிடம் ஏற்கனவே ஒரு வீடு இருக்கிறது. ஆனால் அதை விற்று அதை விட பெரிய, வசதியான வீட்டை வாங்க நினைக்கிறீர்களென்றால் இந்த கடன் உங்களுக்காகவே ஏற்பட்டது தான். உங்களின் தற்போதைய வீட்டின் மதிப்பில் 85% வரை, ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் இந்தக் கடன் வசதி பெற்று புதிய வீட்டை வாங்கிய பின், பழைய வீட்டை விற்று இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தி விடலாம்.

வீட்டு மேம்பாட்டுக் கடன்:
வீட்டை அழகுபடுத்த, தரமான அலமாரிகள், பிட்டிங்குகள் ஆகியவற்றால் வீட்டின் மதிப்பைக் கூட்ட விரும்பினால் அதற்காகவே இந்த கடன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டின் வெளிப்புறம் ரிப்பேர்கள், கூரை, நீர்புகாத் தன்மை, பெயின்டிங், குழாய் வசதிகள், மின் வசதிகள், தளம் போட, க்ரில் அமைக்க போன்ற வேலைகளுக்காக மேம்பாட்டு பணி மதிப்பில் 70% வரை, ரூ.1 கோடிக்கு மிகாமல் இந்தக் கடன் வசதி பெறலாம். அதிகப்பட்சம் 8 வருடங்கள் வரை இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.

வீட்டு விரிவாக்கக் கடன்:
வீட்டை மேலும் விரிவுபடுத்திக் கட்ட விரும்புபவர்களின் பளுவைக் குறைக்க இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, வீட்டின் மேல் கூடுதலாக ஒரு தளம் கட்ட, கூடுதல் அறைகள், கழிப்பறைகள் அல்லது திறந்த பால்கனியை மூடி அறையாக மாற்றுவதற்காக என்பன போன்ற பணிகளைச் செய்ய இத்திட்டத்தில் கடனுதவியில் வழங்கப்படுகிறது.