பணத்தின் வகைகள் - Types of Money

பணத்தின் வகைகள்
பணம் உருவான விதம், வகைகள்.

முதலில் பண்டமாற்று முறையில் தான் கொடுக்கல் வாங்கல் நடைபெறத் துவங்கியது. தன்னிடம் அதிகமுள்ளவற்றைக் கொடுத்து இல்லாதவற்றை (எதிர் தரப்பினரிடம் அதிகமாக இருப்பதை) பெறுதல். தேவைகள் அதிகமாக அதிகமாக பண்டமாற்று அவ்வளவாக ஒத்து வரவில்லை. நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் பொருள் எதிர்தரப்பினருக்கு தேவைப் படாவிட்டால்...? அவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்து, அது யாரிடம் உள்ளது என்று தேடி அவர்களிடம் நம் பொருளைக் கொடுத்து (ஒரு வேளை அவர்களுக்கும் அது வேண்டாம் என்றால்?!)...

இதெல்லாம் வேண்டாம், பேசாமல் ஒரு அளவுகோல் வைத்துக் கொள்வோம் (ஒரு சிறிய தங்கம் அல்லது வெள்ளியாலான வில்லை.). எல்லாப் பொருள்களுக்கும் அதன் மதிப்பை இந்த வில்லைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடுவோம். அரிசி - 5 வில்லை, மீன் - 2 வில்லை, உப்பு - 1 வில்லை, இது மாதிரி தேவைக்கும், உற்பத்திக்கும் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து கொள்வோம் என்று கூடிப் பேசியதன் விளைவு தான் பணம்.

இதனால் வியாபாரம் பெரிய அளவில் அதிகரித்தது. நம்மிடமுள்ள பொருளுக்கு யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அங்கு விற்று நமக்கு தேவையானதை யார் குறைந்த விலையில் தருகிறார்களோ அங்கு வாங்கலாம் என்ற வசதி உண்டாயிற்று.

பணத்தின் வகைகள்:
முதலில் பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட உலோகத்தின் மதிப்பைக் கொண்டு மதிப்பிடத் தொடங்கினார்கள். தங்க நாணயம் என்றால் அதில் உள்ள தங்கத்தின் எடை தான் அந்த நாணயத்தின் மதிப்பு. இது கிட்டதட்ட பண்டமாற்று முறை தான். தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் உபயோகிக்கப்பட்டன. இவை Commodity Money எனப்படும்.

இதற்கடுத்த முறை Credit Money எனப்படுவது. தங்கத்தை நாணயமாக்கி உபயோகிப்பதற்கு பதிலாக அரசாங்கம் தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய அளவு தங்கம் அளிக்கப்படும்.). இது கிட்டதட்ட ஒரு பத்திரம் மாதிரி தான். பணம் நோட்டுக்களாக மாறத் தொடங்கியது.

தாளை வாங்கிக் கொண்டு உலோகத்தை தரும் உத்தரவாதம் எதுவும் இல்லாமல் இந்த நோட்டின் மதிப்பு இது என்று அரசாங்கத்தின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாக உபயோகிக்கும் முறைக்கு பியட் என்று பெயர் (fiat money). யு.எஸ்.ஏ. வின் பணம் இவ்வகையானது தான். (This note is legal tender என்று எழுதப்பட்டிருக்கும்). தற்போது உபயோகத்திலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள உலோகத்தின் மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஒரு அரசாங்கம் இஷ்டத்திற்கு பணம் அச்சடித்து புழக்கத்தில் விட்டால் அதன் மதிப்பு குறைந்து விடும்.