கூடைப்பந்து - Basket ball

கூடைப்பந்து
ஆடுகளத்தின் அளவுகள் மற்றும் ஸ்கோர்.

கூடைப்பந்து சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம்.

ஒரு அணிக்கு 5 பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான 10 முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, பதிலாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம். பந்தை கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும்.

ஆடுகளம்:
பந்தை கையால் தரையில் தட்டிக் கொண்டே ஓடும் பொழுது, பந்து எழும்புவதற்கு ஏதுவான கடினமான, சமமான தரை. நீளம் 28மீட்டர், அகலம் 15மீட்டர்.

களத்தின் இருமுனையிலும் தரையிலிருந்து 3.05மீட்டர் உயரத்தில் ஒரு கூடை தொங்கும். கூடை என்பது 45சென்டி மீட்டர் விட்டமுள்ள இரும்பு வளையமும், அந்த வளையத்திலிருந்து வட்டமான தொங்கும், அடிப்பாகம் திறந்த, கயிற்று வலையும் கொண்டதாகும்.

ஆட்ட விதிகள்:
பந்தை எதிரணியின் கூடையில் எறிந்து விழ வைத்தால் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைக்கும். கூடைக்கு முன்பு தரையில் வரைந்துள்ள அரை வட்டத்திற்கு வெளியே இருந்தவாறே கூடையால் பந்தை எறிந்து விழ வைத்தால் 3 புள்ளிகள் அளிக்கப்படும். அரை வட்டத்திற்கு உள்பக்கத்தில் ஒரு வட்டம் வரையப்பட்டு நடுவில் 'தடையில்லா எறிதலு'க்காக கோடு போடப்பட்டிருக்கும். தங்கள் கூடையில் பந்தை விழாமல் தடுக்கும் போது தப்பாட்டம் (Foul Play) ஆடினால் எதிரணியினர் இந்த கோட்டில் நின்று தடையில்லாமல் கூடையை நோக்கி பந்தை எறிய (Free throw) வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு எறிந்து கூடையில் விழும் பொழுது ஒரு புள்ளி வழங்கப்படும்.

வீரர்கள், எதிரணியின் முனைக்கும், அவர்களது 'தடையில்லா எறிதல்' (Free-throw line) கோடிற்கும் இடையே 3 வினாடிகளுக்கு மேல் நிற்கக் கூடாது. எந்த வீரரும் 5 வினாடிகளுக்கு மேல் பந்தைக் கையில் பிடிக்கக் கூடாது. தங்களது முனையில் பந்து கையில் கிடைத்தால் 10 வினாடிகளுக்குள் அவர்கள் முன்பகுதிக்கு பந்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

சில போட்டிகளில் 30 வினாடிகளுக்குள் பந்தை தன் வசம் வைத்திருக்கும் அணி, எதிரணியின் கூடையில் பந்தை விழ வைக்க முயற்சிக்க வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்படுவதுண்டு.

ஆட்ட நேரம்:
இரண்டு 20 நிமிட பகுதிகளாக ஆடப்படும். ஐந்து முறை தப்பாட்டம் ஆடும் வீரர் அந்த ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். சில இடங்களில் ஒரு ஆட்டத்தை நான்கு 12 நிமிடப் பகுதிகளாகவும் பிரித்து ஆடுவதுண்டு. இவ்வாறு ஆடும் போது ஆறு முறை தப்பாட்டம் ஆடும் வீரர் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார்.

ஒலிம்பிக்ஸ் நிலவரம்:
ஆண்களுக்கான கூடைப் பந்தாட்டம் 1936ம் ஆண்டிலும், பெண்களுக்கான ஆட்டம் 1976ம் ஆண்டிலும் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட்டது. 1992 முதல் முழு நேர கூடைப் பந்தாட்டக்காரர்களும் ஒலிம்பிக்ஸில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒலிம்பிக்ஸில் இறுதிப் போட்டி பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் (U.S.A.), சோவியத் யூனியன்/ரஷ்யா விற்கும் இடையே தான் நடக்கும். ஐக்கிய அமெரிக்கா 12 தடவைகளும், சோவியத் யுனியன் இரு முறையும், யுகோஸ்லாவியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

வரலாறு:
கனடாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் (USA) மஸ்ஸாசூசெட்ஸ் நகரில் வாழ்ந்த Dr.ஜே.நைஸ்மித் என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் 1891ல் இந்த விளையாட்டு பிறந்தது.