வாலிபால் - Volleyball

வாலிபால்
ஆடுகளத்தின் அளவுகள் மற்றும் ஸ்கோர்.

ஒரு அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தை தட்டி எதிர்பக்கம் அனுப்பும் விளையாட்டு. பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, இந்த அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

ஆடுகளம்:
சமதளம், பெரும்பாலும் உள் அரங்கில் விளக்குகள் ஒளியில் ஆடப்படும் விளையாட்டு. களத்தின் நடுவில் வலையும், அதன் இரு புறமும் 3 அடியில் ஒரு கோடும் போடப்பட்டிருக்கும். எந்த வீரரும் அந்தக் கோட்டைத் தாண்டி வலையருகில் கால் வைத்தாலோ, வலையில் உடலின் எந்தப் பகுதியாவது பட்டாலோ, தப்பாட்டமாக (Foul) கருதப்படும்.

வலையின் மேல்மட்ட உயரம் ஆண்களுக்கு 2.43 மீட்டராகவும், பெண்களுக்கு 2.24 மீட்டராகவும் இருக்கும்.

ஆட்ட விதிகள்:
முழங்கை வரையிலும், விரல்களாலும் பந்தை தட்டி மேலெழும்பச் செய்யலாம். எழும்பிய பந்தை எதிரணி பக்கம் ஓங்கி அடிக்க (Spike) உள்ளங்கையால் அடிக்கலாம். ஒருவர் தொடர்ந்து ஒரு முறைக்கு மேல் பந்தை தட்டக் கூடாது. பந்து தங்கள் பக்கம் வந்ததும் மூன்று தட்டுதலுக்கு மிகாமல் எதிரணி பக்கம் திருப்பியனுப்ப வேண்டும்.

பந்தை முதலில் தட்டுதல் 'சர்வீஸ்' எனப்படும். இது எல்லைக் கோட்டிற்கு வெளியே இருந்து வலையில் தட்டாமல் எதிரணியினரின் பகுதிக்கு செலுத்த வேண்டும்.

சிறிது வரலாறு:
வாலிபால் விளையாட்டு அமெரிக்க விளையாட்டு பயிற்சியாளர் வில்லியம் மோர்கன் என்பவரால் 1895ல் உருவாக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் 1964ம் ஆண்டு வாலிபால் இரு பாலருக்குமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

பீச் வாலிபால் எனும் கடற்கரையில் ஆடும் வாலிபால் ஆட்டத்தில் ஒரு அணிக்கு இருவர் மட்டுமே ஆடுவார்கள். 1940களில் அமெரிக்காவில் ஆடப்பட்ட இந்த வகை தற்போது பல நாடுகளிலும் பரவி, ஒலிம்பிக்கில் 1996ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது.